தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தென்னாபிரிக்கா மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (28) தொடங்கியது.
இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 418 ஓட்டங்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஸிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஸிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 200 ஓட்டங்களைக் கடந்து விளையாடி வரும் நிலையில், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், அந்த அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். ஸிம்பாப்வே அணித் தலைவர் கிரைக் எர்வின், கேசவ் மகாராஜின் 200-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறினார்.
இதுவரை தென்னாபிரிக்க அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ், 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 11 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு பத்து விக்கெட்டுகள் அடங்கும்.