முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி
ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.
அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.
