அட்டாளைச்சேனையில்...
ஊடகவியலாளர்கள், மாணவர்கள், சமூக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு
(றியாஸ் ஆதம்)
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது.
குறித்த கௌரவிப்பு விழா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் தலைமையில் அட்டாளைச்சேனை யாடோ வரவேற்பு மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அகமட் அப்கர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நட்சத்திர அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசிக், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகவியலாளர்கள், கல்வியலாளர்கள், உலமாக்கள், சமூக சேவையாளர்கள், முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்களின் குடும்பத்தினர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இக்கௌரவிப்பு விழாவில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம், தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்திடைந்த ஊடகவியலாளர்களின் பிள்ளைகள், கல்வி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சமூகப் பணிகளின் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் என பலரும் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.