(நூருல் ஹுதா உமர் )
முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாச்சார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரினி அபயசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் – ஸ்ரீ லங்கா Women's Corps - Sri Lanka) அமைப்பின் தலைவி நிகாஸா ஷர்பீன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேற்குறித்த இத்தீர்மானம் எடுக்கப்பட்டதானது இன ரீதியாக சிந்திப்பவர்களுக்கு பலத்த அடியாகும் என்பதோடு முஸ்லிம் மாணவிகள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் இந்த அரசின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்பத்தியுள்ளது.
இத் தீர்மானத்திற்காக தங்களுக்கு இந்த நாட்டின் முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெண்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முஸ்லிம் மாணவிகளின் ஆடை தொடர்பில் சட்டங்கள் இருந்தாலும் கடந்த காலங்களில் பல்வேறான அசௌகரியங்களை பரீட்சைகளின் போதும் கல்வி கற்றலின் போதும் இம்மாணவிகள் எதிர்நோக்கி வந்தமையை நாம் மறந்துவிட முடியாது.
சில சமூகம் சார்ந்த மற்றும் நாட்டின் நன்மை கருதி தங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பார்க்கும் போது மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயம் தங்கள் மீது தோன்றியிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது எனவும் அவரது நன்றிசொல்லும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.