காத்மாண்டுவில் உள்ள சிங்கா அரண்மனை எனப்படும் பிரமாண்டமான அரசு மாளிகை, இளைஞர்கள் வைத்த தீயின் காரணமாக கருகியது. அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் நாசமாகின.
நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காத்மாண்டு முழுவதும் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஹெலிகொப்டரில் தப்பிச் சென்றுள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா, சாலாநாத் கனால், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ஷெர் பகதூர் தேவ்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காயங்களுடன் தப்பினர். முன்னாள் பிரதமர் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். (a)