நாட்டின் பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை சென்னைக்கு அழைத்து இரு கட்சிகளுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற “அயலக ஆளுமைகளுக்கான பாராட்டு” நிகழ்வில் கலந்து கொண்ட இந்தியா முஸ்லிம் லீக்கின் சிரேஷ்ட தலைவர்கள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக இந்திய முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு கிளையின் உபதலைவரும் முன்னாள் லோக் சபா உறுப்பினரருமான அப்துர்ரஹ்மான் தெரிவித்ததாக உதயம் 23.09.2025ம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசியல் உயர்விருதான “தகை சார் தமிழர் விருது” பெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீனுக்கு வழங்கப்பட்ட பாராட்டு உபசாரத்தினை இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளும் இணைந்து நடாத்தியமையை அவதானித்த பின்னரே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் உபதலைவர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுட்சிகள் ஒன்றுபட்டுச்செயற்படுவது மிக முக்கியமானது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் உணர்ந்துள்ளமையினால் தான் இப்பேச்சுவார்த்தையை சென்னையில் நடாத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக முன்னாள் லோக் சபா உறுப்பினர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.
அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் உட்பட வெளிநாட்டுப்பிரதிநிதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் அளித்த இராப்போஷன விருந்தின் பின்னர் உரையாற்றிய அப்துல் ரஹ்மான் இது பற்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சந்திப்பை தாம் வரவேற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் தெரிவித்தனர்.
இதே நேரம் இம்முயற்சிக்கான இணைப்பு நடவடிக்கைகளை முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன்
ஆகியோரை மேற்கொள்ளுமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் முன்னாள் லோக் சபா உறுப்பினர் அப்துர்ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.