அறுகம்பே அரை மரதன் நாளை கோலாகலமாக ஆரம்பம்...
22 நாடுகளிலிருந்து 100 வெளிநாட்டவர்களும் 150 உள்நாட்டவர்களும் பங்கேற்பு
(றியாஸ் ஆதம்)
அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி நாளை (10) இடம்பெறவுள்ளது.
ABAY HOLIDAYS யின் பிரதான அனுசரணையில் அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும் இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இம்மரதன் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
”ஒன்றாக ஓடி ஒன்றாக எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மரதன் ஓட்டப் போட்டியில் உள்நாட்டு வெளிநாட்டு மரதன் ஓட்ட வீரர்கள் என 250 பேர் பங்குபற்றவுள்ளனர். மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டங்களில் பிரசித்தி பெற்ற தென் ஆபிரிக்கா, கென்யா போன்ற நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், பதக்கம் மற்றும் சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் போட்டிகளில் அறுகம்பே அரை மரதனும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் அறுகம்பே அபிவிருத்தி போரம் 7வது தடவையாக இந்தப் போட்டியினை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.