வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு எவ்வித இடையூறுமின்றி ஆயுர்வேத தசைப்பிடிப்பு நிலையமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் 30,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்தப் பிரதேசத்தின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயதிலக பண்டார என்பவருக்கு 14 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் செலுத்தவும் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 30,000 ரூபாவை அபராதமாக வசூலிக்கவும் நீதிபதி மேலும் உத்தரவிட்டுள்ளார்.
2018 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுர்வேத தசைப்பிடிப்பு நிலையத்தை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் 40,000 ரூபா இலஞ்சமாகக் கோரி, அந்தத் தொகையில் 30,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது குறித்த பொலிஸ் அதிகாரி இலஞ்ச, ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகள் தொடர்பில் தீர்வை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டினூடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு எந்தவொரு சந்தேகமுமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரதிவாதிக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை வழங்குமாறு உத்தரவுப் பிறப்பித்த நீதிபதி அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதல் சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதிபதி அவரின் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.