மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை


 அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆடை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கான கேள்வி 

மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார்

அது மாத்திரமின்றி இரு நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முன்னெடுக்கப்படுவதாகவும் தொடர்ந்தும் தெரிவித்து வந்தனர்.

15 சதவீத வரி குறைப்பை பெற்றுக் கொண்டு ஆடை தொழிற்துறையை பாதுகாக்க முடியும் என்றும் உறுதியளித்தனர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு 20 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமை இலங்கையின் ஆடை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையச் செய்யும். இது மாத்திரமின்றி மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எந்தளவு வரி

44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் எம்மை விட குறைவான வரி வீதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமையால் அது அமெரிக்க ஏற்றுமதி சந்தையில் எமக்கு பாரிய சவாலாக அமையும்.

ஏனைய நாடுகள் தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிந்து கொள்ளாமல், இலங்கை மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து அனைவரும் கவலையடைந்துள்ளனர். இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் நிலவரம் என்ன என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வாறிருப்பினும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் பொய் கூறியமையால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றம் குறிப்பிட்டுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்