இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று(மே 18) இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ போரில் சிங்கள அரசும், இராணுவமும் இணைந்து ஈழத் தமிழா்களின் வாழ்விடங்கள், பாடசாலை, மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழித்தன. இறுதியாக, 2009 மே 17, 18 ,19 ஆம் திகதிகளில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இது குறித்து கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இலங்கையில் நிகழ்ந்த ஆயுதச் சண்டை முடிவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
தமிழ் இனப் படுகொலை நாளான இன்றைய நாளில், நாம் பறிகொடுத்த உயிர்களையும், பிரிந்தொழிந்த குடும்பங்களையும், சிதைக்கப்பட்ட சமூகங்களையும், இந்நாள் வரை மாயமாகி கண்டுபிடிக்க முடியாது போன நபர்களையும் நினைவுகூருகிறோம்.
கனடாவில் தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் தங்களுடன் தாங்கள் இன்னுயிராய் நேசித்தவர்களைப் பற்றிய நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.