எப்போதும் போல்
நீ பேசாமலே
இருந்திருக்கலாம்
என்னிடம்...!
தெரியாத்தனமாய்ப்
பேசிவிட்டாய் ...!
நானும்
கிறுக்குத்தனமாய்
எனக்கே
விளங்காத கிறுக்கள்
மொழியில்
சுவர்கள் எங்கும்
எழுதிவிட்டேன்.!
உன் பெயரையும்
என் பெயரையும்...!
சுவர்களுக்கு
வாய் முளைத்து
உன்
அப்பா காதில்
சொல்லும் என்று
யாருக்கு தான் தெரியும் ?
நான்
என்றோ ஒரு நாள்
நாக்கு நமநமக்க
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
நான் பறித்த மாங்காய்
உன்
அப்பாவை உசுப்பிவிட
உன் வீட்டு சாட்டை
என்
உடம்பில் விளையாடியது.!
அடடா, இன்னமும் புளிக்கிறது
மாங்காயின் சுவையை போலவே..!
மாங்காய் திருடியவன்
உன்னையும் திருடிவிட்டால்
விழித்துக்கொண்ட
உன் வயதான தந்தை
அவசரத்தில்
கொட்டிவிட்டார் உனக்கு
டும் டும் டும்
கெட்டிமேள தண்டனை !
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கமா..?
எங்கோ, நீ
நலமுடன் இருப்பாய்
உன்
படிப்பைக் கெடுத்த இந்தப்
பாவியை திட்டாமல்
மன்னிப்பாயாக
அன்பே..!
_ செல்வம் பெரியசாமி