வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஹசீனா அரசுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்த மாணவர்கள் தாங்கள் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சிக்கு ஜாதிய நாகரிக் கட்சி என்று பெயரிட்டுள்ளனர். இது ஆங்கிலத்தில் நேஷனல் சிட்டிசன் பார்ட்டி (தேசிய குடிமக்கள் கட்சி) என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டில் வரும் தேர்தலில் பழம்பெரும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இந்தக் கட்சி போட்டியிடும்.
கேள்வி என்னவென்றால் வங்கதேசத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிலிருந்து இந்தப் புதிய கட்சி எவ்வளவு வித்தியாசமானது மற்றும் அது மக்கள் மத்தியில் என்ன கொள்கைகளை எடுத்துச் செல்ல இருக்கிறது?
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தக் கட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அரசியல் வல்லுநர்கள் இதற்கு என்ன எதிர்காலத்தைப் பார்க்கிறார்கள் என்பதையும் கண்டறிய நாங்கள் முயற்சி செய்தோம்.
கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா, இஸ்லாம், இந்து, பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதங்களின் புனித நூல்களின் பாராயணத்துடன் தொடங்கியது. சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு குறித்து சமீபகாலமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் ஒரு நாட்டில், அனைத்து மதங்களின் புனித நூல்களுக்கும் பகிரங்கமாக மதிப்பளிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்தது.இந்த புதிய இளைஞர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அனிக் ராய் பேசுகையில், "எங்கள் இயக்கத்தில் அனைத்து மதம் மற்றும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. குர்ஆனை படித்து எந்தப் பணியை தொடங்கினாலும் அங்கு அனைத்து மதங்களின் புனித நூல்களும் குறிப்பிடப்படவேண்டும்," என்று கூறினார்.
இந்தக் கட்சியை வழிநடத்தும் மாணவர் தலைவர்கள் நாட்டில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஆண்டு போராட்டக்களம் கண்டனர்.. 1971இல் வங்கதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய குடும்பங்களுக்கு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2018 இல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவால் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2024 ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் அதை மீண்டும் அமலாக்க உத்தரவிட்ட போது நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஹசீனா அரசு ஒடுக்குமுறைகளை கையாண்டதால் மாணவர் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதன் நீட்சியாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் பிறகு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசில் மாணவர் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் விழா பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது.
வங்கதேசத்தின் பழைய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் சில தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர்.