வாக்களிப்போம் நல்லவரைப் பார்த்து - நாம்
வரிந்துநிற்போம் கைகளையே கோர்த்து .
தூக்கியெறிவோம் சுயநலமே கொண்டவரை -
உடன் துரத்திடுவோம் எதிரியில்லை என்றவரை.
விலையில்லாப் பொருளையெலாம் கொடுத்து - நம்மை
விலைபேசினார்
உரிமையெலாம் பறித்து .
உழைக்கவுமே பணியெல்லாம் மறுத்து - இளைஞர்
உணர்வையெலாம் புதைத்துவிட்டார் எடுத்து .
மதுவாலே பலகோடி இலாபம் - இந்த மயக்கத்தில்
மக்களெல்லாம் பாவம் ,
விதியாலே இவையெல்லாம் இல்லை - இவை
வீணாக நாம்தேடிய தொல்லை .
உழைப்போர்க்கு உயர்வில்லை நாட்டிலே - இதை
உணர்ந்தேதான் எழுதிவிட்டேன் பாட்டிலே ,
பிழைக்கவழி காட்டாத ஆட்சிதான் - தினம்
பிச்சையெடுத்து வாழுகின்ற காட்சிதான்.
புரையோடிப் போனதெங்கும் ஊழல்தான் - இதைப்
பூசிமறைப்பதே ஆட்சியருக்கு வேலைதான் ,
கறைபடியாக் கரமெல்லாம் எவருமில்லை - நாட்டில்
கண்ணாடிப் போலெந்த சுவருமில்லை .
பதவிபெற சண்டைதான் தெருவிலே - தினம்
பச்சோந்தி தோற்றுவிடும் உருவிலே ,
உதவிசெய்ய வருவதில்லை யாருமே - இதை
உணர்ந்துநீங்கள் வாக்களித்தால் மாறுமே !