விமானங்கள் கொள்வனவு மோசடி:
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ
CID யில் ஐந்து மணி நேரம் வாக்கு மூலம்
விமானக் கொள்வனவு மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று (26) குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு
2013 ஆம் ஆண்டில் A-330 ரக விமானங்கள் 06, மற்றும் A-350 ரக விமானங்கள் 08 கொள்வனவு செய்யப்பட்டன.
இதன்போது எயார் பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களுக்குமிடையில் முறைகேடான கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றுள்ளமை சம்பந்தமான விசாரணைகளின் ஒரு அம்சமாகவே, நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஸவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இக்கொடுக்கல் வாங்கல்களில் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளமை, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாரிய மோசடி விசாரணைகள் தொடர்பான அலுவலகம் மூலமே வெளிப்பட்டிருந்தது.
எயார் பஸ் நிறுவனம் தொடர்பில் வெளிநாட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ஊடாகவே, இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்தை விலையை விட அதிக விலையில் விமானக் கொள்வனவு இடம்பெற்றுள்ளதாக இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றம் அப்போது குடியுரிமை தடையையும் விதித்திருந்தது.
சர்வதேச ரீதியில் வெளியாகியிருந்த இந்த ஆவணங்களில் எயார் பஸ் நிறுவனம் மூலம் இந்த விமானங்கள் விற்பனை செய்வதற்கு முன்னரே, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான நியோமாலி விஜேநாயக்கவுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கு அமைய மேற்படி விமானம் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதற்கு முன்பதாக, எயார் பஸ் நிறுவனம் 16 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை இலஞ்சமாக நியோமாலி விஜேநாயக்கவுக்கு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிறுவனத்திற்கு ஆகக் குறைந்தது 02 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் வழங்கியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான விசாரணைகளை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேற்கொண்டி ருந்தது.அத்துடன் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியையும் கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும், நேற்றைய இந்த விசாரணையின் போது மேற்படி கொடுக்கல் வாங்கல்களுக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று அவர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரிய வருகிறது