'சிங்க் கசிவுகள்' 'மணி பிளான்ட்' உட்பட வீட்டு உட்சூழலில் நுளம்பு பெருகக்கூடிய நிலைமைகள் அவதானிப்பு!




சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு Dr.உவைஸ் பாறுக் (MOH) அறிவுரை

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களினதும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனப் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் பிரதேசத்தில் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்கள் என இதுவரை 46 பேர் இணங்காணப்பட்டு, அவர்களில் 26 பேருக்கு டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய பூச்சியியல் பிரிவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், டெங்கு பரவக்கூடிய 'இடைநிலை அபாயம்' (Medium Risk) உள்ள இடமாக பொத்துவில் பிரதேசம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொத்துவில் - 01, பொத்துவில் - 08 மற்றும் RM நகர் ஆகிய பகுதிகள் இதில் அடங்குகின்றன. 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் விசேட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ், குறித்த இடங்களை மையப்படுத்தி தற்போது டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கல்முனை பிராந்தியத்திலுள்ள சகல கள டெங்கு கட்டுப்பாட்டுக் ஊழியர்களும் கூட்டாக இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பாவிக்கப்படாத மலசல கூடங்கள், சமையலறை சிங்க் கசிவுகள் (Sink Leaks), குளிர்சாதனப் பெட்டிகளின் நீர் தேங்கும் தட்டுகள் மற்றும் வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் 'மணி பிளான்ட்' (Money Plant) போன்றவைகளால் வீட்டு உட்சூழல்களில் நுளம்பு பெருகக்கூடிய நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

தற்போது பருவபெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளது. வெளிச்சூழலிலும் டெங்குவின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் குறிப்பாகத் தினமும் பாவித்து வீசுகின்ற தகரப் பேணிகள், யோகட் கப்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பூச்சாடிகள், மரப்பொந்துகள், கூரைகள், பீலிகள், குழாய் கிணறுகள், பாதுகாப்பற்ற கிணறுகள், நீர் தேங்கும் இடங்கள் என்பவற்றில் மிகவும் அவதானமாக இருந்து சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வது அவசியமாகும்.

டெங்குவினை சுகாதாரத்துறையினரால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றி அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அத்துடன் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், விளையாட்டு கழகங்கள் தொண்டு நிறுவனங்கள் என்பனவும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அப்போதுதான் டெங்கு அபாயத்திலிருந்து நாம் முழுமையாக மீள முடியும் என்றார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்