பானந்துறையில் பிரபல தொழிலதிபர் கடத்தல் - பொலிஸார் தீவிர விசாரணை!
————————————————
பானந்துறை, மஹாநாம வீதியின் கிளை வீதியொன்றில் பானந்துறை பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த வேளையில், இனந்தெரியாத நபர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று (29) இரவு 10.00 மணியளவில் குறித்த தொழிலதிபர் தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் காரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, வீட்டிற்கு அருகில் வைத்து வேறொரு காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் தொழிலதிபரைத் தாக்கி, அவரது காரின் கண்ணாடிகளை உடைத்து இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாக பானந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொழிலதிபரின் மகள்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், காயமடைந்த மனைவி பானந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத குழுவினர் தொழிலதிபரை கடத்த முயன்றபோது, தொழிலதிபர் தனது காரை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார். இதன்போது கார் வீதியிலிருந்த சாக்கடை ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தொழிலதிபரின் காரின் கண்ணாடிகளை உடைத்து, அவரை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் வந்த காரில் அவரை ஏற்றிப் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொழிலதிபரின் உறவினர் ஒருவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பானந்துறை தெற்கு பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் தொழிலதிபரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பானந்துறை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Panadura
#PanaduraNews
#BreakingNewsLK
#CrimeNews
#Kidnapping
#SriLankaNews
#HM mirror
30-09-2026
