மொராக்கோவில், 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் நடந்தி வரும் போராட்டங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ், நேபாளத்தை தொடர்ந்து, வடஆபிரிக்க நாடான மொராக்கோவிலும் ஜென் இசட் எனும் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது நாடு முழுதும் வெடித்துள்ளது. 'ஜென்- இசட் - 212' அல்லது 'ஜென் இசட் எழுச்சி' என இப்போராட்டங்கள் அழைக்கப்படுகின்றன.
சமூக சமத்துவமின்மை, அரசின் ஊழல், பொருளாதார நெருக்கடி, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், சீரழிந்த பொது சேவைகள் மற்றும் 35.80 சதவீதத்தை எட்டிய இளைஞர் வேலையின்மை ஆகியவற்றால், இளம் தலைமுறையினர் விரக்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அகாடிரில் உள்ள ஒரு பொது வைத்தியசாலையில் எட்டு கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது சமீபத்தில் இறந்தனர். இந்தச் சம்பவம் இளம் தலைமுறையினரை, போராட்டங்களில் ஈடுபட துாண்டுகோலாகவும் அமைந்தது.
இப்போராட்டத்தின் முக்கிய சுலோகமாக 'விளையாட்டு அரங்குகள் இங்கே, ஆனால், வைத்தியசாலைகள் எங்கே' என்பதாக உள்ளது.
பொதுச் சேவைகளான சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதை விடுத்து, அந்நாட்டு அரச கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்புக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து வருவதை போராட்டக்காரர்கள் கண்டித்துள்ளனர்.
லிக்ளியா, இனெஸ்கேன் மற்றும் ஓஜ்டா நகரங்களில் நடந்த போராட்டங்களின் போது, பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.இதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.