25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிறப்பு நரம்பியல் நிபுணர் டொக்டர் சுரங்கி சோமரத்ன, பக்கவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.
இம் மாதம் 29ஆம் திகதி வரவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நரம்பியல் நிபுணர், பக்கவாதம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல நடவடிக்கைளை விபரித்தார்.
பக்கவாதம் ஏற்பட்டவர்களில் சுமார் 50% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பக்கவாதத்தை தடுப்பதற்கும் குறைப்பதற்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உரிய நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதையும் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அதுவொரு ஆபத்தான காரணியாகும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.