அடுத்தாண்டு முதல் சகல அரச கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல்மயப்படுத்தப்படும்.மக்களுக்கு சிறந்த சேவை வழங்குதற்காகவே அரச சேவைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.அரச சேவையாளர்கள் மக்களுக்காக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17) ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியதாவது,
பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தை மலினப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதிகள் இந்த நாட்டில் உள்ளார்கள்.ஊர்வலம் போன்று செல்கிறார்கள்,அழுகிறார்கள்,பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சிறப்பு சலுகை வழங்க முடியாது.ஆகவே குற்றஞ்சாட்டுபவர்கள் குற்றம் சாட்டட்டும்.ஊர்வலம் செல்லட்டும்.
அரச சேவையாளர்கள் இன்று அச்சத்துடன் செயற்படுவதாக குறிப்பிடப்படுகிறது.கடந்த கால ஆட்சியாளர்கள் முன்பாக அரச அதிகாரிகள் வாய்திறப்பதில்லை.ஆட்சியாளர்களின் தீர்மானம் சட்டமாக காணப்பட்டது.இன்று அவ்வாறான நிலையா உள்ளது. அரச சேவையாளர்கள் தற்போது தான் சுயாதீனமாக செயற்படுகிறார்கள்.
அரசசேவையை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கிடப்படும். அடுத்தாண்டு முதல் சகல அரச கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல்மயப்படுத்தப்படும்.மக்களுக்கு சிறந்த சேவை வழங்குதற்காகவே அரச சேவைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.அரச சேவையாளர்கள் மக்களுக்காக செயற்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க விசேட அவதானம் செலுத்தப்படும்.ஊழல் மோசடியை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அரச சேவை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும்.சிறந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அரச சேவையாளர்கள் சிறந்த மாற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.