முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேரணி நடத்தப்பட்டால் அது நமது நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் யாரவது நடந்துகொண்டால் சட்டம் அதற்கேற்ற நடவடிக்கையை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அவர் மேலும் கூறுகையில்,
“ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டால் நீதிமன்றம் அது தொடர்பில் விசாரித்து தேவை இருந்தால் அவருக்கு பிணை வழங்கும்.
சட்டம் அனைவருக்கும் பொருந்தும்
இல்லையேல், அவர் சிறையில் தனது காலத்தை செலவிட வேண்டியிருக்கும். அதுதான் சட்டத்தின் வழி. இதேவேளை, ரணிலுக்காக அன்று கூடிய அரசியல்வாதிகளின் குழு, கடந்த காலங்களில் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போதும் ரணிலை சிறைக்கு அனுப்ப விரும்புவதாக ராஜபக்ச குழு கூறியது. இவ்வாறிருக்க, அன்று ரணிலுக்காக கூடியவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் மீது வழக்குகள் உள்ளன.
குற்றங்களைச் செய்தவர்கள் இப்போது குற்றங்களிலிருந்து தப்பிக்க ஒன்று கூடுகின்றார்கள். அனைத்து குற்றவாளிகளும் ஒன்று கூடிவிட்டார்கள் என்பதை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.
ஜனாதிபதிகள் முதல் பொலிஸ் மா அதிபர் வரை சட்டம் அனைவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.