ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் டொக்டர் ஃப்ரிட்ஜோஃப் நான்சென் என்ற ஆராய்ச்சிக் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
எனினும், தற்போது அது, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வரவில்லை என்றும், விரைவில் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு இலங்கைக்கு வரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆராய்ச்சி கப்பல்
இந்தநிலையில், மொரிசியஸின் போர்ட் லூயிஸிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்துள்ள இந்தக் கப்பல், இன்று அல்லது நாளை ஆராய்ச்சிப் பணிகளுக்காக பங்களாதேசுக்குப் புறப்படவுள்ளது.
இதன்போது ஆராய்ச்சிக்குழுவில் இரண்டு இலங்கை விஞ்ஞானிகளும் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கப்பல் முன்னதாக, ஆராய்ச்சி பணிகளுக்காக இலங்கைக்கு வரவிருந்தது எனினும் கொழும்பின் ஒப்புதல் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, இலங்கைக்கு பதிலாக மடகஸ்கருக்கு சென்றது.
இலங்கைக்கு வராததன் காரணம்
இந்தநிலையில் குறித்த கப்பல் ரத்து காரணமாக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவியை இழக்க நேரிடும் என்றும் எதிர்கால காலநிலை நிதிக்கான அணுகலை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் எச்சரித்திருந்தது.
முன்னதாக 2024 ஜனவரியில், முன்னாள் அரசாங்கம் அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கும் ஒரு வருட தடையை விதித்தது, சீன-இந்திய போட்டிகளுக்கு மத்தியில் முக்கியமான கடல்சார் தரவுகளை சேகரித்தல் மற்றும் பகிர்வது குறித்த பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி. மேற்கொள்ளப்பட்ட இந்த தடை 2024 டிசம்பரில் காலாவதியானது.
எனினும் அந்த விடயம் உரிய வகையில் புதுப்பிக்கப்படாமையே ஐக்கிய நாடுகளின் கப்பலான டொக்டர் ஃப்ரிட்ஜோஃப் நான்சென் இலங்கைக்கு வராததன் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.