அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் பணிகள் பாராட்டத்தக்கது : எம்.எஸ்.அப்துல் வாஸித் எம்.பி




உல்லாசத்துறைக்கு பெயர்போன அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதருகின்ற உல்லாச பயணிகளை வரவேற்று அவர்களுக்குரிய பாதுகாப்பினையும் வழங்கி வழியனுப்ப வேண்டியது இங்குள்ள மக்களின் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தெரிவித்தார்.

அறுகம்பே அரை மரதன் போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வு அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் சனிக்கிழமை (26) அறுகம்பே றாம்ஸ் கபே உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அறுகம்பே பிரதேசம் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன ஒரு சிறந்த இடமாகும். தற்போது இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. உல்லாச பயணிகளுக்குரிய பாதுகாப்பை வழங்கவேண்டியது இங்குள்ள மக்களின் பொறுப்பாகும்.

இந்த பிரதேசம் பின்தங்கியதொரு பிரதேசமாக இருந்த போதிலும் உல்லாசத்துறையினால் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நான் தவிசாளராக இருந்த போது பல்வேறு பணிகளை செய்தேன். இந்த பிரதேசத்தின் கல்வி தொடர்பில் இங்குள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பிரதேச செயலகத்தில் பல அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில அமைப்புக்கள் மாத்திரமே சிறப்பாக இயங்குகின்றன. அதில் அறுகம்பே அபிவிருத்தி போரமும் ஒன்றாகும்.  அந்தவகையில் இந்த போரத்தின் பணிகள் பாராட்டத்தக்கது. இந்த போரமானது அரை மரதன் போட்டிகளை நடாத்தி அதில் கிடைக்க்கின்ற வருமானத்தில் 70 வீதத்தினை இப்பிரதேசத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கும் இம்மக்களின் நலன்களுக்காகவும் செலவிடுகிறது. இது உண்மையிலே வரவேற்கத்தக்க விடயமாகும்.

குறிப்பாக அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அரை மரதன் ஓட்டப் போட்டியினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு சகலருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும். இதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நானும் தயாராகவுள்ளேன் என்றார்.

இந்நிகழ்வின் போது அறுகம்பே அபிவிருத்தி போரத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்கு White board வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஅஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.மாபிர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலிக் உட்பட பாதுகாப்புத்துறையினர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்