குற்ற விசாரணைப் பிரிவில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூபாய் 75 இலட்சம் பெறுமதியான நிதி மோசடி தொடர்பாக, குற்றப்பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அவரது வீடு மற்றும் தங்கியிருந்த இடங்கள் பலவற்றிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதும், அவர் ஏற்கனவே தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் விசாரணைக்காக ஆணைக்குழு அவருக்கு அழைப்பு அனுப்பியிருந்த போதும், அவர் ஆஜராகாமல் தவிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடி வழக்கு 2021ஆம் ஆண்டு, நைஜீரியர்களை உள்ளடக்கிய நபர்கள் எட்டுபேர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகும்.
இவர்கள் கோட்டேயில் நடைபெற்ற விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதுடன், ரூ.75 லட்சம் நிதி அப்போது சட்டபூர்வமாக கைப்பற்றப்பட்டது.
இந்நிதி, குற்றப்பிரிவினால் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படாமல் சந்தேகநபர்களிடம் திருப்பி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது குற்ற விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.