விதைத்ததும் நீ ; வெள்ளாமை
வீடு வந்துசேராததற்கு காரணமும் நீ!
கதையல்ல! கழுதை
கழுத்த நீட்டாமல் போனது நீ!
அர்த்த ராத்திரியில் அரிக்கன் விளக்கில்
மல்லிகைத் தோட்டத்தில்
வண்டு பிடித்தபோது மனதில்
வந்தமர்ந்தாய்!
காலமும் கடந்து காதலும் வளர்ந்து
கைப்பிடித்து வருவாய் என காத்திருந்தக்
கடைசி நிமிடம் - ஆம்!
நீயோ
மணாளனோடு மாலைசூடி மகிழ்வாய் அமர்ந்திருக்க! - அந்த காட்சியைக் கண்டு கரை சேரா ஓடமாக கலங்கி நின்றது
வரை என்னில்
உயிராய் நிறைந்திருந்தாய்!
இனம்புரியாத ஒன்று இளமையில் ஆட்டிப்படைத்திட்டதால்
நீதான் உலகமென்று எண்ணி முடங்கிவிட
எழுதுகோலும் காகிதமும் காதல்கொண்டு உறவாடி கருவுற்று பிரசவித்தக் கதைதானடி
கைத்தடி ஊன்றி நடக்கும் இன்றும் கண்முன்னே நிழலாடுகிறது!
கண்ணே கவிதை நீயின்றி வேறேதடி!
எழுதி கிழித்திட்ட காகிதங்கள் இருந்திருப்பின்
நம்மூர் மணல்மேட்டைவிட உயரமாயிருந்திருக்கும்! காரணம்
அத்தனை உயரமாய் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்தாய்நீ!
அழுது வீங்கிய கன்னங்களின் வழியே வழிந்த நீர் தலையணையோடு காய்ந்துபோகாமல்
சேமித்திருந்தால் - அது
கடலளவு கொண்டிருக்கும்!
புதுமையில் நனைந்த நான் புழுதியில் புரண்டழுது
கண்ணீரில் குளித்தேன்
எதுகையும் மோனையும் இயைபும் இணைத்து எசப்பாட்டிசைத்த நீ
இருட்டினில் தள்ளிவிட்டுவிட்டாய்!
உலகிற்கென்னடி கவிதை அதற்கொரு நாள்
உலகே நீதானடி
ஒவ்வொரு நாளும் உந்நாளே!
சேக்கிழார் அப்பபாசாமி