பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து வைத்து நாட்டிற்குள் நுழைவதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளமையால் இரு நாடுகளுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு சென்ற பிரித்தானியாவின் தொழிலாளர் (Labour Party) கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இஸ்ரேல் தடுத்து வைத்ததோடு, அவர்களின் நுழைவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பிரித்தானிய - இஸ்ரேலின் இராஜதந்திர உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனுமதி மறுப்பு
தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யுவான் யாங் (Yuan Yang - ஏர்லி மற்றும் வூட்லி தொகுதி பிரதிநிதி) மற்றும் அப்திஸாம் முகமது (Abtisam Mohamed - ஷெஃபீல்ட் சென்ட்ரல் தொகுதி பிரதிநிதி) ஆகிய இருவரையும் இஸ்ரேல், உள் நுழைய மறுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, இஸ்ரேலின் இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாக குறித்த இரு எம்பிக்களும் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிரான தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் "பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்தகைய முறையில் நடத்துவது ஏற்புடையது அல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்தில் உள்ள எனது சக ஊழியர்களிடம் நான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளேன்.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை
இந்த இரவு 2 உறுப்பினர்களுடனும் நாங்கள் தொடர்பில் இருந்து அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி வருகிறோம்” என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, "பிரித்தானிய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்படுவதையும், பிணைக்கைதிகளை விடுவிப்பதையும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலிய குடிவரவு அமைச்சகம், இந்த எம்.பி.க்கள் "பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பவும்" திட்டமிட்டதாக சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாகவே, அவவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.