சருகு
********
கிளையிருந்து
கீழே வரும் முதுஇலையை
சருகென்று யாரும் சாற்றாதீர்.
சாறு வற்றியதால்
ஆனதல்ல சருகு
மாறாக
அது
காற்றில் காலூன்றிவரும் சிறகு.
அது
வான் வெளியில் கைவீசிவரும்
வயோதிக விரல்.
அது
பணிநிறைவு பெற்றுத்
தாய்வீடு வரும் முதிய தளிர்.
அது
உயிர் மெய் தந்த மண்தாய்மேல்
உருண்டு விளையாட வரும்
பழுத்த குழந்தை.
அது
பகலவன் அடுப்பில்
பச்சையம் சமைத்த
பழைய அடுப்பங்கரை.
அது
காற்றின் வாயூதும்
கச்சேரிக் கூடம்.
அது
எண்ணெயில் குளிக்காமல்
வெய்யிலில் வறுத்த வெண்கல அப்பளம்.
சருகை சற்றே
உற்றுப் பாருங்கள்
அதில்
ஆடை கழற்றிய
ஒரு மனித முதுகு காணலாம் நீங்கள்.
தசையின்றித் தோல் மூடிய
முதுகெலும்பும் விலாஎலும்பும்
அதில் நீங்கள் கண்டதே இல்லையா?
இலையின் பச்சையை விட
சருகின் வண்ணம் பேரழகு இல்லையா?
அதைத்
தங்கம் பூசிய தகடு என்பதா?
இல்லை
சந்தனம் பூசிய உதடு என்பதா?
அதை
அந்தியின்
தாம்பூல வானத்தைத்
துண்டு செய்த துண்டு என்பதா?
இல்லை
முதுமை வந்ததால்
துறவறம் பூண
காவியாடை கட்டிய ஞானி என்பதா?
சருகு சத்தம் போடுகிறதே
எதனால் என்று எண்ணியதுண்டா நீங்கள்?
அது
இளைய இலையாய் இருந்த போது
தன்
இடுப்புக் கிள்ளிய
காற்றை நினைத்து
இப்போது சிரித்துக் கொள்கிறதா?
கூடு திறந்து வைத்துக்
கூடிய பறவைகளின்
வெட்கங்கெட்ட செயலை
இப்போது
ஆற்றாமை பொங்க அலுத்துக் கொள்கிறதா?
முன்பெல்லாம்
தன்னைக் கொண்டு
தானே கைதட்டிக் கொண்டதே
ஒற்றைக் காலில் ஊஞ்சலாடிக் கொண்டே
நடனமாடிக் கொண்டதே
இப்போது
அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறதா?
கிளிகள் பாதம் தாங்கியதையும்
கதிரவன் ஒளி வாங்கியதையும்
இரவில் பனி ஏந்தியதையும்
மழையில் துளி சேந்தியதையும்
காற்றின் கண்ணுக்குத் தெரியாமல்
காய்பொத்திக் காத்ததையும்
இப்போது
ஓசையோடு உளறிக் கொள்கிறதா?
அல்லது,
எதுவும் நிரந்தரம் இல்லை
ஆணவம் கூடாது.
எல்லோர்க்கும்
முதுமை என்ற ஒன்று உண்டு
மரணம் நிச்சயம் உண்டு.
அதனால்
அனைவரையும் அன்பு செய்யுங்கள்
முடிந்தவரை நன்று செய்யுங்கள்
உறவு பேணுங்கள்
என்று
பச்சை இலைகளுக்குப் பாடம் எடுக்கிறதா?
எதுவாயினும் இருக்கட்டும்.
தரையில்
கால் வைக்கும் போது மட்டும்
கவனமாக இருங்கள்
சருகு தானே என மிதித்து விடாதீர்கள்
அதன் தலையில்
உங்கள் கால் இறங்கும் போதுதான்
அது
ஓவெனக் கூச்சலிட்டபடி
முதன்முறையாக இறந்து போகிறது.
இனி அந்தப் பாவம் செய்யாதீர்கள்.
- விக்டர்தாஸ்