சுகாதார அமைச்சின் செயலாளர் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்
✒️ றியாஸ் ஆதம்
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (09) விஜயம் செய்தார். விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த செயலாளர் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிட்டதுடன், சீன அரசாங்கத்தின் நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினையும் பார்வையிட்டார்.
அத்துடன் கட்டணம் செலுத்தும் விடுதி (Paying Ward), அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்ட செயலாளர் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடனும் கலந்துரையாடினார்.
கட்டணம் செலுத்தும் விடுதி (Paying Ward),
அவசர சிகிச்சைக்கான பொது வைத்திய நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர் உட்பட வைத்தியசாலையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல், அறுகம்பே பிரதேசத்தில் ஆயுர்வேத மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், அம்பாரை பொது வைத்தியசாலையின் மேலதிக உதவியுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை (Medical Tourism) உல்லாச பிரயாணிகளுக்கான மருத்துவ வசதி விரிவாக்கம் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் செயலாளரிடம் முன்வைத்தனர்.
அத்துடன் வைத்தியசாலை அபிவிருத்திக்கு உதவி செய்து வரும் சுகாதார அமைச்சருக்கும் இதன்போது நன்றி தெரிவித்த அபிவிருத்திக் குழுவினர், அமைச்சரை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து தருமாறும் செயலாளரிடம் கேட்டுக்கொண்டர்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள்,
அம்பாரை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்,
அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலையின்
பணிப்பாளர் டொக்டர் சந்திரசேன, பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நிதின் றனவக்க, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் டொக்டர் உவைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.