நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது: ஆதம்பாவா எம்.பி தெரிவிப்பு
✒️றியாஸ் ஆதம்
அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.
கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு (16) நிந்தவூர் அட்டப்பள்ளம் Atas Resort யில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினை அரிசியாக மாற்றி இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்ற அரிசி உற்பத்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சகல வழிகளிலும் பெரும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர். அவர்கள் நாட்டுக்குரிய வர்த்தகர்களாக மாத்திரமில்லாமல் உற்பத்திகளை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும்.
இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளைப் போன்று எமது நாடும் மாற்றமடையும் வகையில் அரசாங்கத்தினால் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சங்கத்தின் தலைவர் ஏ.எல்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பிரதம கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், கணக்காளர் ஐ.எம்.பாரிஸ், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சீ.ஜலால்டீன், தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.நிஜாமுடீன், எஸ்.ஜாபீர், சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுச் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.