துபையில் இன்று (மார்ச் 4) நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.
இதன் மூலம், 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.
ஆனால், முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே இருவரும் தங்களது விக்கெட்டை இழந்தனர். 4வது ஓவரில், ஆஸ்திரேலியாவின் பென் த்வார்ஷுயிஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார் சுப்மான் கில். அவர் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக 7வது ஓவரில், கூப்பர் கோனொலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் பிறகு, விராத் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சேர்ந்து, இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு, நிதானமான ஆடி வந்த நிலையில், ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ்.
சிறப்பாக ஆடி வந்த கோலி, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா தற்போது, 44 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற, 36 பந்துகளில் 36 ரன்கள் தேவை. ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர்.